"வித்தியாசமா யோசிச்சா ஜெயிக்கலாம்!" - ஓவியர் ஸ்யாம்

- சா.இலாகுபாரதி

ஸ்யாம். முழுப்பெயர் ஸ்யாம்சங்கர். தன் வாழ்க்கையில் நடந்த எல்லா பாதக நிகழ்வுகளையும் பாஸிட்டிவாக அணுகி, வெற்றிகளாக மாற்றிக்கொண்டவர். 15 வயதில், தனியாக சென்னைக்கு வந்து, சில நாட்களிலேயே பிரபல பத்திரிகைகளில் வேலை பார்க்கத் தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர ஆங்கிலப் பத்திரிகை உலகிலும் இவரது ஓவியங்கள் பேசுகின்றன. இளமைத் துள்ளும் இவரது ஓவியங்களுக்கு ரசிகப் பட்டாளம் ஏராளம். கவர்ச்சியையும் வசீகரத்தையும் குழைத்து யூத்ஃபுல்லாகவும் கலர்ஃபுல்லாகவும் கொடுப்பது ஸ்யாம் ஸ்பெஷல். இனி அவரது எளிய பேச்சு மொழியிலேயே...

'வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவனே வெற்றி பெறுகிறான்; வெற்றிப் பெற்றவர்கள் எல்லோரும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்களே!'

- யாரோ அறிஞன்

"நான் எல்.கே.ஜி. படிக்கும்போது சண்முகம்னு ஒரு பெரியவரை வீட்டுல வேலைக்கு வெச்சிருந்தாங்க. நல்ல கருப்பா உயரமா இருப்பாரு. வேட்டியை மடிச்சிதான் கட்டுவாரு. சட்டைப் போடமாட்டாரு. அவருதான் என் கைப்பிடிச்சு ஸ்கூலுக்கு கூட்டிப்போவாரு. முதல் ரெண்டு நாள் அவரோடு போனேன். முணாவது நாள் அவர் வேண்டாம்னு அடம்பிடிச்சேன். 'எதுக்கு வேண்டாம்னு சொல்றேன்'னு யாருக்குமே புரியல.

'ஏங் கண்ணு என்னை வேண்டாங்கறே...'ன்னு சண்முகம் ரொம்பப் பாவமா கேட்பாரு. 'எதுக்கு வேண்டாங்கறே...'ன்னு எல்லாரும் கேட்பாங்க. இவரு 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்'னு சொன்னேன். எல்லாத்துக்கும் புரிஞ்சிடுச்சி. ஆனா, சண்முகத்துக்குப் புரியல. எங்க மாமா, 'சண்முகம், நீங்க போகும்போது வேஷ்டியை எறக்கிட்டுப் போங்க. அதான் பையனுக்கு கோவம்'ன்னாரு. மறுநாள்லேயிருந்து வேட்டியை எறக்கிட்டுப் போனாரு. அப்பக்கூட வெகுளியான அவருக்கு அது தெரியல. சரி தம்பின்னு கூட்டிப்போவாரு. சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும், சுவர்லே சண்முகத்தை வரைஞ்சு, நல்ல பேண்ட் சட்டையெல்லாம் மாட்டியிருந்தேன்.

'பையன் இப்படி படம் வரையறானே'ன்னு எங்க வீட்டுலே ரசிச்செல்லாம் பார்க்கமாட்டாங்க. ஒரு கட்டத்துக்குப் பிறகு சுவத்துலே வரையிற டிராயிங் அதிகமானதும் எங்க அப்பா என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. 'எப்பப் பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்கான்; எப்பப் பார்த்தாலும் படம் வரையறான்...'ன்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதுலே வேற யரோ சொல்லிட்டாங்க, 'படம் வரையறவனோட வாழ்க்கையெல்லாம் கடைசியிலே சோகத்துலதான் முடியும்'னு. அதனாலே, எப்பப் படம் வரைஞ்சாலும், 'கைய ஒடிச்சிடுவேன்; காலை ஒடிச்சிடுவேன்னு'தான் சொல்வாங்க. இதெல்லாம் எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது.

நாலாவது, அஞ்சாவது படிக்கிற வரைக்கும் ஸ்கூல் புக்ஸ்லே படம் வரைஞ்சி வெச்சிருப்பேன். எங்கெல்லாம் ஒயிட் ஸ்பேஸ் இருக்கோ அங்கெல்லாம் படம் இருக்கும். இது கொஞ்சம் அதிகமானதும் எங்க தாத்தா வீட்டுலே கொண்டுபோய் விட்டுட்டாங்க.
தாத்தா கொஞ்சம் ரசனைக்காரர். அங்கேயும் சுவத்துலே படம் வரைய ஆரம்பிச்சேன். யார் என்ன சொன்னாலும் அதை படமா வரைஞ்சி, சஜஷன் சொல்லுவேன். ஸ்கூல்லே நல்லா படிக்கலைன்னு சொல்லி, இங்கிலீஷ் மீடியத்திலேருந்து தமிழ் மீடியம் மாத்துனாங்க. அங்க 'சாந்தி டீச்சர்'னு ஒருத்தர் இருந்தாங்க. அவங்களுக்கு பெரிய பல்லு. வாயிலேருந்து வெளியே துருத்திகிட்டுநிக்கும். சிரிச்சாலும் அழுதாலும் அதே ஸ்டைலில்தான் இருப்பாங்க.

அப்போ, எங்க வீட்டுலே நன்னாறி வேர், எலுமிச்சம் பழமெல்லாம் பிழிஞ்சி, பானையிலே தண்ணி வெச்சிருப்பாங்க. அதனாலே, எந்த டீச்சருக்கு தண்ணி வேணும்னாலும், 'ஸ்யாம் போய் வீட்டுலேருந்து செம்பு தண்ணி கொண்டுவாடா'ன்னு அனுப்பிடுவாங்க. இந்த சாந்தி டீச்சர் ஒரு நாளைக்கு மூணு முறையாவது தண்ணி கேப்பாங்க. அவங்க வகுப்பே இல்லைன்னாலும் வந்து வந்து தண்ணி கொண்டுவரச் சொல்லுவாங்க. தண்ணி குடிக்கிற வரைக்கும் கை கட்டிக்கிட்டே நிக்கணும். அவங்க தண்ணி குடிக்கும்போது பல்லுலே பட்டு மழை மாதிரி 'தபதப'ன்னு என் மேலே கொட்டும். அப்படியே சட்டையிலே தொடைச்சிட்டு நிப்பேன். இது ரெகுலரா நடக்கும்.

ஒருநாள், சாந்தி டீச்சர் தண்ணி குடிக்கிறாங்க. பல்லுலேயிருந்து தண்ணி சிதறி விழுது. நான் கீழே நிக்கிறேன். ஆனா, குடை பிடிச்சி இருக்கேன். இப்படி, ஒரு படம் போட்டு இருந்தேன். ஆனா, எதுக்குப் போட்டேன்... ஏன் போட்டேன்னு யாரும் கேட்கலே. இந்தமாதிரி ஓவியத்தின் மூலமா ஒரு விஷயத்தை நிறைவேத்துற மனநிலை எனக்கு அப்பவே இருந்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஸ்கூல்லே நடக்குற எல்லா பெயின்டிங் காம்பிடேஷன்லேயும் எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். அதுக்காகவே என்னை ஸ்கூல்லே வெச்சிருந்தாங்க. ஆனா, ஒவ்வொரு வருஷமும் ஒரு ஸ்கூல் மாறிட்டே இருப்பேன். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டின்னு சுத்திசுத்தி எல்லா ஊர்லேயும் படிச்சேன். கோவில்பட்டியிலே மட்டும் எப்படியோ தப்பித் தவறி மூணு வருஷம் படிச்சிட்டேன். அங்கே ஹாஸ்டல்லே தங்கி படிச்சேன். அந்த சூழல் ரொம்பப் பிடிச்சிருந்தது; ஜாலியாவும் இருந்தது.

அப்போ, சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன். நாலு வருஷமா ஃபெயிலன ஒரு பையன் அதே கிளாஸிலயே இருந்தான். பேர் இசக்கிராஜன். அவன் பெரிய ஆள் மாதிரி இருப்பான். கொஞ்சம் ரவுடித்தனமாவே இருப்பான். 'ம்... சரி, நல்லா படமெல்லாம் வரைவியாமே, இந்தா என் கையிலே சில்க் ஸ்மிதா படம் வரை'ன்னான். 'சில்க் ஸ்மிதா படமா...'ன்னு, நான் ஏதோ கவர்ச்சியா வரைஞ்சிட்டேன்.

அங்க சரஸ்வதி டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க, தமிழ் டீச்சர். 'என்னடா பண்றே'ன்னாங்க. நான் அந்தப் பையன் கையிலே வரைஞ்சிட்டு இருக்கிறதை பின்னாலேயிருந்து பார்த்துட்டு, 'எந்திரிடா'ன்னாங்க. 'நீயும் எந்திரிடா'ன்னு சொன்னதும், அவன் தெனாவட்டா நின்னான். அவன் டீச்சரைவிட உயரம். டீச்சர், 'என்னடா'ன்னதும், 'உங்களைதான் டீச்சர் வரைஞ்சிட்டான்'னு ஒரே போடா போட்டான். எனக்கு பயத்துலே ஒண்ணும் புரியாமே, 'இல்லே டீச்சர். அது சில்க் ஸ்மிதா'. 'சில்க் ஸ்மிதாவை வேற வரையரையா நீ'ன்னு ரெண்டு போடு போட்டு, 'ஹெட்மாஸ்டர்கிட்ட வாடா'ன்னாங்க. நான், இசக்கிராஜன், சரஸ்வதி டீச்சர் மூணு பேரும் ஹெட்மாஸ்டர் அறைக்குள்ளே நுழைஞ்சோம்.

அதுவரைக்கும் எனக்கு டிராயிங் வரையத் தெரியும்னு அந்த ஸ்கூல்லே யாருக்கும் தெரியாது. ஹெட்மாஸ்டர் எங்களைப் பார்த்ததும். 'இசக்கிராஜா நீ போடா... இவனை நான் பார்த்துக்கறேன்'னு அவனை அனுப்பி வெச்சிட்டாரு. அவன் ரவுடியாச்சே! டீச்சரையும் அனுப்பி வெச்சிட்டார். என்னை உட்காரச் சொன்னார். சரி ஏதோ பண்ணப்போறாங்கன்னு, 'இல்லை சார், நான் நிக்கிறேன்'னேன். 'உனக்குப் படம் வரையத் தெரியும். அதை ஏன் கெட்ட வழியிலே பயன்படுத்தறே. ஏன் நல்ல வழியிலே பண்ணக்கூடாது. சில்க் ஸ்மிதா படம் வரைஞ்சா உனக்கு என்ன கிடைக்கும்.' 'இல்லை சார் அது வந்து சார்...' 'அப்படியெல்லாம் நீ செய்யாதே... ரெண்டு வாரம் கழிச்சி ஓவியப் போட்டி வருது. விவேகானந்தா கேந்திரத்திலேருந்து லெட்டர் போட்டு இருக்காங்க. இப்பதான் அந்த லெட்டரைப் படிச்சேன். படிச்சதும் நீ வந்து நிக்கறே. இனிமே உன்னை நல்வழிப் படுத்திக்கணும்...'னு அட்வைஸ் பண்ணார். 'சரி சார்'ன்னு சொன்னேன்.

விவேகானந்தா கேந்திரத்திலேருந்து என்னை திருநெல்வேலிக்கு கூட்டிட்டுப் போய், அங்க ஓவியப் போட்டி வெச்சாங்க. எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ். ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சதும் கன்னியாகுமரிக்கு கூட்டிப்போனாங்க. மூணு நாள் அங்கேயே தங்கவேண்டியதா போச்சு. அங்க தங்குறதுக்கு ரூமெல்லாம் இல்லை. பெரிய ஹால் இருந்தது. எல்லாரும் படுக்க தனித்தனி ரூம் மாதிரி சாக்பீஸ்லே கோடு போட்டு, எழுதியிருந்தாங்க: 'நீ இதை சுவர்ன்னு நினைச்சா இது சுவர்; கோடுன்னு நினைச்சா கோடு. நீ சுவரா நினை'. அந்தச் சின்ன வயசுலே அதைப் படிக்கும்போது வித்தியாசமா இருந்தது. அந்த எண்ணம் அப்படியே மனசுலே பதிஞ்சுடுச்சு.

டென்த் படிக்கும்போது மூர்த்திங்கிற பையனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. அவன் ரஜினி ரசிகன். ரஜினிக்கு ஒரு லெட்டர் போட்டான். அவரும் பதில் கடிதம் அனுப்பிட்டாரு. அவ்வளவுதான் அவன் ஹீரோ ஆயிட்டான். ஸ்கூல்லே எவனும் என்னை மதிக்கலை. இந்தமாதிரி ரஜினி கிட்டேருந்து லெட்டர் வந்தா நம்பளை யாரு மதிப்பா..? அப்போ பரீட்சை வேற நடந்துட்டு இருந்தது. முடியட்டும்னு இருந்தேன். முடிஞ்சதும், கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் போகவேண்டியவன் மெட்ராஸுக்கு பஸ் ஏறிட்டேன். கையிலே ஒரு முன்னூறு ரூபா. அப்புறம் ரஜினி, கமல், சத்தியராஜ் இப்படி நிறைய ஹீரோக்களோட படம். அவ்வளவுதான்.

எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து நடந்தே ஏவி.எம். ஸ்டூடியோ வந்தேன். உள்ளே போனா, 'குற்றவாளிகள்'னு ஒரு படம் ஷூட்டிங். வேடிக்கைப் பார்க்கலாம்னு அங்கிருந்த ஒரு கல்லு மேலே உட்கார்ந்தேன். கல்லு டபக்குன்னு உள்ளே போயிடுச்சு. எழுந்து ஒரு திண்ணையிலே உட்கார்ந்தேன். திண்ணை பொதக்குன்னு போயிடுச்சு. 'ஏய்... ஏய்... அங்கே உட்காராதப்பா, எல்லாம் செட்டு'ன்னு சொல்லிட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் வந்தாரு, 'யாரு நீ... எல்லாத்தையும் உடைச்சிட்டு இருக்கே'ன்னார். 'இல்லைங்க டிராயிங் வரைஞ்சிருக்கேன் ரஜினிகாந்தைப் பார்க்கணும்.' 'என்னது ரஜினிகாந்தைப் பார்க்கணுமா.' 'அட்லீஸ்ட் கமல், சத்தியராஜையாவது பார்க்கணும்; ஆட்டோகிராஃப் வாங்கணும்'னேன். 'ஊர்லேருந்து கிளம்பி வந்திருக்கியா... எங்க படத்தைக் காட்டு'ன்னார். பார்த்துட்டு, 'எதுக்குப்பா இதெல்லாம் உனக்கு, எதிர்லேதான் 'அம்புலிமாமா' பத்திரிகை இருக்கு அங்கப் போனாலும் எதாச்சும் வேலை கொடுப்பாங்க'ன்னு சொன்னாரு.

அம்புலிமாமா ஆபீஸ் பக்கம் போனேன். மறுநாள் இன்டர்வியூ. அதனாலே, 'நாளைக்கு வா'ன்னாங்க. இன்டர்வியூலே ஒரு படம் போட்டு காண்பிச்சேன். இன்டர்வியூ பண்ண பிரசாத் ரெட்டிக்கு படம் புடிச்சுப்போச்சு. வேலையும் கிடைச்சிடுச்சு. வவுச்சர்லே கையெழுத்து போடச்சொல்லி, கையிலே 350 ரூபா கொடுத்து, 'தம்பி நாளைக்கு வந்து வேலையிலே சேர்ந்துக்கோ'ன்னு சொல்லி அனுப்பி வெச்சார். எனக்கு ஒரே ஆச்சர்யம். மெட்ராஸுக்கு வந்த ரெண்டாவது நாள்லேயே, 350 ரூபா முன்பணத்தோட வேலை கிடைச்சிடுச்சேன்னு ஒரே சந்தோஷம். அந்த சந்தோஷத்தோடயே போய், மறுநாள் வந்தேன். ஒரு சின்ன டேபிள் போட்டு உட்காரச் சொன்னாங்க. வேலையே இல்லாம, பதினோரு மணி வரைக்கும் 'பே... பே...'ன்னு முழிச்சிட்டு இருந்தேன். சுடச்சுட ஏலக்கா டீ வந்தது; குடிச்சேன். ஒருத்தர் வந்து, 'தம்பி, இங்க கேண்டீன் இருக்கு. சாப்பாட்டு வெறும் 10 பைசாதான். இங்கேயே சாப்பிட்டுக்கோ'ன்னார்.

பத்து பைசவா... ஆச்சர்யமா இருந்தது. மத்தியம் கேண்டீன்லேயே சாப்பிட்டேன். பத்து பைசா வயிறையே நிரைச்சிடுச்சு. வெளியே வந்தா கார் டிரைவர் ஒருத்தர், 'என்னப்பா வேலைக்கு புதுசா..?' 'ஆமா, நீங்க எந்த ஊரு.' 'திருநெல்வேலி, நீ...'ன்னாரு. 'நான் ராஜபாளையம்'. 'அப்படியா நமக்கு ரொம்பப் பக்கம். நான் விளம்பரம் கொடுக்குறதுக்காக குமுதம் ஆபீஸ் போகப் போறேன். அங்க வேலை பார்த்தான்னே நிறைய சம்பளம் கொடுப்பாங்க; பேரும் கெடைக்கும். வரீயா... கூட்டிட்டுப் போறே'ன்னாரு.

அவரோடயே கார்லே போய் குமுதம் வாசல்லே இறங்கினேன். 'நான் உள்ளே போய்ட்டு வர்றேன்... அதுக்குள்ளே யாராச்சும் வருவாங்க. அவங்ககிட்டே பேசி வாய்ப்பு கேளு'ன்னார். ரிசப்ஷன்லே உட்கார்ந்துட்டு இருந்தேன். யாரோடேயோ பேசிட்டே பாக்கியம் ராமசாமி வந்தார், 'யாருப்பா நீ...?' 'ஆர்டிஸ்ட்.' 'அப்படியா! படமெல்லாம் நல்லா போடுவியா'ன்னு, தோள் மேலே கை போட்டு கூட்டிப்போய், அவர் டேபிள் பக்கத்துலே உட்காரவெச்சாரு. டேபிள் டிராயர்லேருந்து கடலை உருண்டை, பொரி உருண்டை எல்லாம் எடுத்து கொடுத்து, 'சாப்பிடு, வந்துர்றேன்'னு போனார். கால் மேலே கால் போட்டு சாப்பிட ஆரம்பிச்சேன்.
அந்த நேரம் பார்த்து ஒருத்தர் என்னை கிராஸ் பண்ணார். திரும்பி வரும்போது, 'யாரு நீ..?' 'ஆர்டிஸ்ட்.' அவருக்கு கோவம் வந்துடுச்சு. 'என்ன தெனாவட்டா பதில் சொல்றானே'ன்னு பார்த்தாரு. அப்புறம் பாக்கியம் ராமசாமி வந்தாரு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போனவர் எங்கிருந்தோ குரல் கொடுத்தாரு. 'யாருப்பா அது..?' 'ஆர்டிஸ்ட்டுப்பா'ன்னார் பாக்கியம் ராமசாமி. அப்புறம், 'யாராச்சும் வந்தா நின்னுட்டுதான் பேசணும். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். சின்ன பையனா இருக்கிறே... அதான் இதெல்லாம் உனக்குத் தெரியலை...'ன்னார். வந்துட்டுப் போனவர் ரா.கி.ரங்கராஜன்.

'அப்புறம்... என்ன வரையத் தெரியும்'னு கேட்டார். ஏற்கெனவே வரைஞ்சி வெச்சிருந்த ரஜினி, கமல் படங்களை காட்டினேன். பார்த்துட்டு, 'இதெல்லா வரைய நிறைய பேர் இருக்காங்க. அதனாலே இதைவிடு. நல்ல, அழகான பொண்ணு படம் வரைவியா...' 'சரி சார் வரையரேன்'னு சொல்லி, கடகடன்னு செக்ஸியான ஒரு பொண்ணு படம் வரைஞ்சேன். 'பரவாயில்லையே ஸ்பீடா வரையிறையே... நல்லாவும் வரையிறையே...'ன்னு சொல்லிட்டு, ஒரு பச்சைக் கதவு திறந்து, உள்ளே போனார். அவரு பின்னாடியே ரெண்டு மூணு பேர் போனாங்க. வெளியே வந்ததும் என்னை இன்னொரு ரூமுக்கு கூட்டிப் போய், 'நான் ஒரு கதை சொல்லுவேன். அதுக்குப் படம் போடுவியா...' 'சொல்லுங்க போடுறேன்.'

'ஷில்பா... ஷில்பா...ன்னு ஒரு பொண்ணு. யாரு...?' 'ஷில்பா... ஷில்பா...ன்னு ஒரு பொண்ணு.' 'அவ படுத்திருக்கா, என்ன பண்றா...' 'படுத்திருக்கா' 'படுத்துக்கிட்டு லேம்ப் வெச்சிக்கிட்டு படிச்சிட்டு இருக்கா, இதை நீ எப்படி போடுவே...'ன்னார். 'எப்படி போடணும்...' - நான் கேட்டேன். 'நீ எப்படி போடுவியோ அப்படி போடு'ன்னார். எவ்வளோ செக்ஸியா போடணுமோ அவ்வளோ செக்ஸியா போட்டேன். நைட்டி போட்டுக்கிட்டு, அவ படிக்கிறா... படிக்கிற புக் ஃபேன்லே பறக்குது... வெச்ச கண் வாங்காமே எல்லாரும் பார்த்தாங்க. அதை கொண்டு உள்ளே போய், யார்கிட்டேயோ காட்டுறாங்க. உள்ளே இருக்கிறவர் ஓகே. சொல்லிட்டார். ஓ.கே. சொன்னர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை.

அந்தப் படத்தையே இன்னும் அழகா போட்டுத் தரச் சொன்னாங்க. பாக்கியம் ராமசாமி சொன்னார், 'நீ யார் கதைக்கு படம் போட்டு இருக்கே தெரியுமா... ராஜேஷ் குமாரோட தொடர்கதைக்கு படம் போட்டிருக்கே'. அது மெட்ராஸ் வந்த மூணாவது நாள். அப்போ எனக்கு, அது பெரிய விஷயமாவே தெரியலை. படம் போட்டு முடிச்சதும், 'நீ எங்க வேலை பார்க்குறே'ன்னு பாக்கியம் சார் கேட்டார். 'சந்திரமாமா பிள்டிங்லே வேலை பார்க்குறேன்.' 'அப்படியா... தினமும் மத்தியானம் 2 மணிக்கு மேலே இங்கே வந்துடு 4 மணி வரைக்கும் இரு... மாசம் 2 ஆயிரம் ரூபா வாங்கித் தர்றேன்'னார். மறுபடியும் மறுபடியும் ஆச்சர்யமா இருந்தது. என்னடா இது மெட்ராஸ் வந்ததும் இப்படி இன்னொரு வேலையான்னு ஒரே சந்தோஷம்.

ஒரு விஷயத்தைச் சொன்னா, சில நிமிஷத்திலே படம் கொடுக்கிற மாதிரி வெச்சுக்கிட்டேன். அது அவங்களுக்கு ரொம்பப் புடிச்சது. இப்பவரைக்கும் அப்படிதான் வரையிறேன். ஒருத்தர் சொன்ன, அஞ்சாவது நிமிஷத்துலே அவங்க கையில் நான் வரைஞ்ச படம் இருக்கும். குமுதம் ஆபீஸுக்கு கூட்டி வந்த டிரைவரைப் பார்த்தேன், 'பார்த்தியா நான் சொன்னபடி நல்ல சம்பளத்துலே வேலை கிடைச்சிடுச்சு, அதேமாதிரி ஆனந்த விகடன், கல்கி, வாரமலர்... எல்லாப் பத்திரிகைக்கும் போய் பாரு'ன்னார். அஞ்சு நாள் ஆச்சு. சொல்லாமயே வந்துட்டதாலே ஊர்லே என்னை தேடுறாங்க.

அம்புலிமாமா ஆபிஸ்லே நான். இன்டர்வியூ எடுத்தவர் என்னை கூப்பிட்டாரு. கூப்பிட்டவரு பிரசாத் ரெட்டி. உள்ளே போனா எல்லா பத்திரிகை ஆபீஸ்லேருந்தும் லெட்டர் வந்திருக்கு. ரெட்டி கேக்கறாரு... 'ஈயந்தா ஏமி' (இதெல்லாம் என்ன?) 'என்ன... தெரியலையே...'னு சொன்னேன். 'என்ன தெரியலையா....' பத்திரிகை பேர் எல்லாம் சொல்லி, 'இங்கிருந்தெல்லாம் உனக்கு லெட்டர் வந்திருக்கு'ன்னார். 'ஆமா சார் அங்கெல்லாம் போனேன்; டிராயிங்க்ஸ் கொடுத்துட்டு வந்தேன். லெட்டர் வந்திருக்கா'ன்னேன். 'இந்த மாதிரி எல்லாரும் பண்றாங்கன்னுதானே உனக்கு முன்பணமா 350 ரூபா கொடுத்தேன். நீங்க எல்லாருமே இப்படிதான் இருப்பீங்களா... இங்க சம்பளம் கொடுக்கிறேன் வெளியே வேலை பார்க்குறீயே... என்ன அர்த்தம்...?'ன்னு எரிச்சலா கேட்டாரு. 'உனக்கு இதைவிட வெளியே சம்பளம் ஜாஸ்தின்னா தாராளமா வெளியே போகலாம்...' 'எனக்கு குமுதத்துலே 2 ஆயிரம் ரூபா தரேன்னு இருக்காங்க. அங்கே போகப் போறேன்னேன்'. 'போ... போ...'ன்னார். வெளியே வந்துட்டேன்.

குமுதம் வந்தேன். தொடர்ந்து வேலை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. காலையிலே மத்தப் பத்திரிகைகளுக்குப் போறதும், மத்தியானம் 2 மணி ஆச்சுன்னா குமுதம் வர்றதுமா இருந்தேன். ரெண்டு மாசத்துலே வேலை பளு கூடிடுச்சு. எல்லாரும், 'நீ ஏம்பா இங்க வர்றே வீட்லேயே இரு. நாங்க வந்து படம் வாங்கிக்கிறோம்'ன்னாங்க. நானோ ரயில்வே ஸ்டேஷன்லே... பயணிகள் விடுதியிலே தங்கி இருக்கேன். அங்கே எப்படி படம் போட முடியும். வீடு பார்த்தாகணும். அப்பதான் ஞாபகம் வந்தது.

'அம்புலிமாமா' பத்திரிகையிலே சேர்ந்த அன்னைக்கே ஒரு வயசான எல்.ஐ.சி. ஏஜென்ட் வந்தார். 'தம்பி, புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கியா... நீயெல்லாம் எல்.ஐ.சி. பாலிசி போட்டு வீடு வாங்கலாமே'ன்னார். எனக்கு அவரைப் பார்த்தா பரிதாபமா, பாவமா இருந்தது. 'பாலிசி போட்டா வீடு வாங்கித் தருவீங்களா...' 'கண்டிப்பா வாங்கித்தருவேன். பாலிசி போடுறீயா...?' 'எவ்வளவு கொடுக்கணும்.' 'மாசம் 300 ரூபா கொடு. முதல் மாசம் நானே கட்டுறேன். அடுத்த மாசத்துலேருந்து நீ கட்டணும்'. 'வீடு மட்டும் வாங்கித் தர்லேன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.' 'சரிப்பா போடு வாங்கித்தர்றேன்'னு சொன்னார். பாலிசி போட்டு, கையிலேருந்து அடுத்த மாசத்துக்கான 300 ரூபாயும் கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவரை மறந்தே போயிட்டேன்.

'வீட்லேயே வந்து படம் வாங்கிக்கிறோம்'னு எல்லாரும் சொல்லும் போதுதான் அவர் ஞாபகத்துக்கு வந்தார். பஸ்ஸுக்காக ஒரு பஸ் ஸ்டாண்டுலே காத்திருந்தேன். அங்க எல்.ஐ.சி. ஏஜென்ட் இருந்தார். ஓடிப்போய், 'என்னங்க, 'வீடு வாங்கித் தர்றேன்'னு சொன்னீங்க. வீடு என்ன ஆச்சு'ன்னு கேட்டேன். அவரு, 'என்னப்பா இப்படி ரோட்லேயே கழுத்த பிடிச்சிக்கிட்டு கேட்கிறே... நான் எப்படி உனக்கு வீடு வாங்கித்தர முடியும்' 'நீங்கதானே சொன்னீங்க... 'வீடு வாங்கித் தர்றேன்'னு, அப்போ 300 ரூபா வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டீங்களா...' 'நான் எதுக்குப்பா உன்னை ஏமாத்தப்போறேன். வீடு வாங்கணும்னா சேலரி சர்டிபிகேட் வேணும். அது இருந்தாதான் வீடு வாங்க முடியும். அதுக்கு முதல்லே நீ ஏற்பாடு பண்ணு. அதுவரைக்கும் வாடைக்கு வேணும்னா வீடு பிடிச்சி கொடுக்கிறேன்'னு சொல்லி வீடு பார்த்து கொடுத்தாரு.

ஊருக்கு லெட்டர் போட்டேன். 'எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது... வாடகைக்கு வீடு பார்த்துவிட்டேன். இனிமேல் எனக்கு கவலை இல்லை. இனி உங்களிடம் காசு எதிர்பார்க்க மாட்டேன். சென்னைக்கு வரவும்'னு எழுதி போஸ்ட் பண்ணிட்டேன். அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. ரெண்டு மாசத்துலே சம்பாதிச்சு சேர்த்து வெச்சிருந்த 20 ஆயிரம் ரூபாயை கொண்டுவந்து கொடுத்தேன்.

'ஏதுடா இவ்வளோ பணம்...' 'படம் வரைஞ்சேன். காசு கொடுத்தாங்க.' 'எவன்டா அவன், படம் வரைஞ்சா காசு கொடுக்கறது...' - பத்திரிகையிலே படம் போடுவாங்க. படம் வரைஞ்சி கொடுத்தா காசு கொடுப்பாங்க. இது எதுவும் தெரியாம கேட்டாங்க. மறுநாள் குமுதம் ஆபீஸ் போனேன். அரஸ், வாஞ்சிநாதன், பாண்டியன் எல்லாம் இருந்தாங்க. நக்கீரன் கோபாலுக்கு கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்திருந்தாரு. என்னை பார்த்துட்டு, 'யாரு இந்தத் தம்பி'ன்னு கேட்டார். பாக்கியம் ராமசாமி சொன்னார், 'ஆர்டிஸ்ட். பையன் நல்லா படம் வரையறான்.' 'அப்படியா, தம்பி நாளைக்கு வந்து அலுவலகத்துலே என்னைப் பார்க்கறீங்களா...'ன்னார். 'சரி'ன் சொன்னேன்.

மறுநாள் காலையிலே நக்கீரன் ஆபீஸ்லே இருந்தேன். கோபால் சார் இருந்தார். 'எந்த ஊரு, என்ன பேரு...' எல்லாம் விசாரிச்சார். ஆனா, நானோ வீடு வாங்குறதுலேயே குறியா இருந்தேன். அதனால அவர்கிட்டே கேட்டான். 'சார் ஒரு சின்ன ஹெல்ப்.' 'சொல்லு தம்பி, என்ன வேணும்.' 'மெட்ராஸ் வந்ததும் ஒருத்தர்கிட்டே எல்.ஐ.சி பாலிசி போட்டேன். அவரு வீடு வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. இப்ப என்னடான்னா சேலரி சர்டிபிகேட் இருந்தாதான் வீடு வாங்க முடியும்னு சொல்றார். அதனாலே எனக்கு சேலரி சர்டிபிகேட் தரமுடியுமா'ன்னு கேட்டேன்.

'என்ன தம்பி மெட்ராஸ் வந்து எத்தனை வருஷம் ஆச்சு' 'ரெண்டு மாசம்' 'ரெண்டு மாசத்துலேயே வீடு வாங்கணும்னு நினைக்கிறீங்களா... வீடு வாங்குறது ரொம்பப் பெரிய விஷயமாச்சே. சரி, சேலரி சர்டிபிகேட் கொடுத்தா வீடு வாங்கிடுவீங்களா...'

'கண்டிப்பா வாங்கிடுவேன் சார்'

'அப்போ சேலரி சர்டிபிகேட் கொடுக்குறேன்' 'எவ்ளோ சம்பளத்துக்கு சேலரி சர்டிபிகேட் கொடுக்கணும்' 'அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். வீடு வாங்கணும். அதுகேத்தமாதிரி சேலரி சர்டிபிகேட் வேணும்'னு சொன்னேன். அவரும் கொடுத்தாரு. ஒரு படமும் அவருக்கு வரைஞ்சி கொடுக்கலை. என்கிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காம சேலரி சர்டிபிகேட் கொடுத்தாரு. இப்பவும் அந்த சர்டிபிகேட் வெச்சிருக்கேன். அதனாலே இன்னை வரைக்கும் அவர் மேலே எனக்கு மரியாதை உண்டு.

அந்த சர்டிபிகேட் எடுத்துட்டு எல்.ஐ.சி. ஆபீஸ் போனேன் தாத்தா வெளியிலே உட்கார்ந்து இருந்தாரு. சேலரி சர்டிபிகேட் கொடுத்து, 'இந்தாங்க வீடு வாங்கிக் கொடுங்க...' 'இருப்பா... ஏம்பா இப்படி பயமுறுத்தறே... என் கை, காலே நடுங்குதுப்பா...' 'தாத்தா நீங்கதானே சொன்னீங்க சேலரி சர்டிபிகேட் இருந்தா வீடு வாங்கி கொடுக்குறேன்னு இந்தாங்க சர்டிபிகேட்.' 'இந்தாப்பா... அடிக்கடி என்னை தாத்தா தாத்தான்னு சொல்லாதே. நான் ஒரு ஏஜென்ட். சீனியர் ஏஜென்ட்.' 'ஏஜென்டா இருந்தாலும், நீங்க தாத்தாதானே....' 'சரி விடு உனக்கு வீடு வாங்கி கொடுத்தாதான், ஒரு தொல்லை முடியும். வா...'ன்னு கூட்டிபோய் 'கீதா'ங்கிற ஆபீஸர் கிட்டே அறிமுகப்படுத்தி என்னைப் பத்தி சொன்னாரு. அவங்க புரொசீஜர் எல்லாம் சொல்லி, 'முதல்லே ஒரு பிள்டரைப் பார்த்து, வீடை ஓகே பண்ணி, வீட்டுப் பத்திரத்தை கொண்டுவாங்க அப்பதான் லோன் வாங்க முடியும்'னு சொல்லி அனுப்பிட்டாங்க.

எங்கெங்கேயோ அலைஞ்சேன். அப்புறம் சூளைமேடு ஜக்கையா காலனியிலே ஒரு வீடு கட்டிட்டு இருந்தாங்க. அங்க அப்பா அம்மாவை கூட்டிட்டுப் போனேன். எல்லாம் பேசி முடிச்சு ரெண்டே முக்கால் லட்சத்துக்கு ஒரு வீடு ரெடியாச்சு. பத்திரம் எல்லாம் வாங்கிட்டு எல்.ஐ.சி. ஆபீஸ் போனேன். இன்டர்வியூ வெச்சாங்க. டாக்குமென்ட்ஸ் எல்லாம் கொடுத்தேன். மேனேஜர் சொன்னாரு, 'தம்பி நீ ஆர்டிஸ்டா... உனக்கு லோன் தர்றேன். என்னை அப்படியே அச்சு அசலா படம் வரைஞ்சிடு. இப்பவே உனக்கு லோன் சாங்கஷன் பண்டிட்றேன்'னார். நான் அவரை கொஞ்சம் இளமையாவே வரைஞ்சிட்டேன். அவருக்கு அந்தப் படம் ரொம்ப புடிச்சு போயிடுச்சு. மறுநாளே ரெண்டு லட்ச ரூபா லோன் சாங்கஷன் பண்ணிட்டாரு. மீதி எழுபத்தி அஞ்சு ஆயிரத்துக்கு என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தபோது நக்கீரன் ஆபீஸுக்கு மறுபடியும் போனேன். கோபால் சார்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். 'தம்பி, இப்ப என்கிட்ட பதினஞ்சு ஆயிரம்தான் இருக்கு. இதைக் கொண்டு போங்க'ன்னு கொடுத்து அனுப்பினார். இன்னும் கொஞ்சம் பணத்தை அப்பா ஏற்பாடு பண்ணிட்டார்.
ஊர்லேயிருந்து மணியார்டர் வந்தது. வீடு வாங்கிட்டேன். அப்புறம், சுஜாதா சொல்லி 'ஆனந்த விகடன்'லே சான்ஸ் கிடைச்சது. அவரோட 'தூண்டில்'ங்கிற தொடருக்கு முதல்லே படம் போட ஆரம்பிச்சேன். அப்புறம் 'அவள் விகடன்'லே போடச் சொன்னாங்க, 'ஜீ.வி.'லே போடச் சொன்னாங்க. இந்தப் பக்கம் குமுதம், இந்தப் பக்கம் விகடன்னு எந்தப் பாரபட்சமும் இல்லாம போட ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் இந்தப் பயணம் போயிட்டே இருக்கு.

ஓவியங்கிறது எல்லாரும் நினைக்கிற மாதிரி, பயப்படுறதுக்கான கலை இல்லை. இதில் வேலை வாய்ப்புகள் இல்லைன்னு நினைக்கவும் தேவை இல்லை. நான், இந்தத் துறைக்கு வந்த காலத்தைவிட, இப்போ வேலை வாய்ப்புகள் அதிகமா கொட்டி கிடக்கு. பேஷன் டிசைனிங்லேயும் ஓவியம் வரையறது ஒரு பார்ட்டா இருக்கு. சில நேரங்களில் அதையும் பண்றேன். சினிமா, விளம்பரப் படங்களிலேயும் 'ஸ்டோரி போர்ட்'டுக்கான தேவையிருக்கு. அதையும் செய்யறேன். இப்படி நிறைய விஷயங்களை பரிசோதிச்சுட்டே இருக்கேன்.

ஓவியத் துறைக்கு வர்றவங்க முதல்லே தன்னை தயார்படுத்திக்கணும். கற்பனை செய்யிற அளவுக்கு அறிவும், கலையை நேசிக்கிற அளவுக்கு மனசும், எப்பவும் வித்தியாசமா யோசிக்கிற மாதிரியான எண்ணங்களையும் வளர்த்துக்கணும். இதெல்லாம் இருந்தா ஓவியத் துறையிலே நிச்சயம் ஜெயிக்க முடியும்!

முந்தைய மைல்கல் : "மிகச் சாதாரண மக்களே என் கேமராவின் ஹீரோக்கள்!" - ஆர்.ஆர்.சீனிவாசன்

Tamil English  
(tamil typing : ammaa = அம்மா, vikatan = விகடன்)
 Name
  E-Mail
  Comment
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவுக்கு நன்றி. நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும். காத்திருக்கவும்)
Click Photo To View Profile    
Name
Comments
Sreenivasan
Shyam, please check your hand. You must have one line(curved) parrallel to your life line. Your life events show some extraordinary heavenly help.

4 day ago | Report abuse

arivumani
பின்னீடீங்க!!

11 day ago | Report abuse

Radha
திரு ரவி அவர்களே, சர்டிபிகேட் "வாங்கணும்", சர்டிபிகேட் "ஏற்பாடு" பண்ணுங்க - இதிலிருந்தே தெரிகிறதல்லவா, சர்டிபிகேட் என்பதே இல்லாததை இருப்பதாகக் காண்பிப்பதற்காகத்தான்! ஸ்யாம் பேசாமல் சர்டிபிகேட்டையும் வரைந்து கொடுத்து விட்டிருக்கலாம்!

12 day ago | Report abuse

Sakthi J
ஆசிர்வதிக்கபட்டவர்...no -ve twist and turns....good to read...born genius...

13 day ago | Report abuse

RAvi, Dallas, USA
//வீடு வாங்கணும். அதுகேத்தமாதிரி சேலரி சர்டிபிகேட் வேணும்'னு சொன்னேன். அவரும் கொடுத்தாரு// தவறான முன்னுதாரணம்! வேலையே செய்யாமல் சேலரி சர்டிஃபிகெட் கொடுத்தது மோசடி! சாரி ஷ்யாம்!

14 day ago | Report abuse

pon.sudha
நல்ல நம்பிக்கை தரும் பதிவு.

14 day ago | Report abuse

For contents & Feedback: youthful@vikatan.com I For technical issues : webmaster@vikatan.com I For Advt: dotcom@vikatan.com
Copyright © 2008 Vikatan.com Pvt Ltd. all rights reserved.