சிறந்த எழுந்தாளருக்கான பரிசுத் தொகை ரூ.30 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னை:
 
சிறந்த நூல் எழுதிய எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சிக்கும், பண்பாடு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, மற்றும் திருவள்ளுவர் திருநாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார். பெருந்தலைவர் காமராஜர் விருது ஜெயந்தி நடராஜன் எம்.பி.க்கும், அய்யன் திருவள்ளுவர் விருது பா.வளன் அரசுக்கும், தந்தை பெரியார் விருது கோ.சாமிதுரைக்கும், அறிஞர் அண்ணா விருது து.ரவிக்குமார் எம்.எல்.ஏ.க்கும், அம்பேத்கார் விருது டி.யசோதா எம்.எல்.ஏ.க்கும், பாரதியார் விருது நா.மம்மதுவுக்கும், தமிழ் தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் அய்யாசாமிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது இரா.இளவரசுக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது இரா.மதிவாணனுக்கும் வழங்கப்பட்டது.

விருதுகளை பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கபதக்கத்தையும் முதல்வர் கருணாநிதி வழங்கி சிறப்பித்தார். விருதுகளை பெற்ற தமிழ் அறிஞர்களை பாராட்டி முதல்வர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  முதலில் தொகுப்புரையைப் பற்றிய ஒரு குறிப்பு. என்னை அவர்கள் இங்கே விளித்துப் பேசும்போது, திருவள்ளுவரின் மறுஉருவமாக நான் இருக்கிறேன், வாழும் வள்ளுவராக இருக்கிறேன்   என்றெல்லாம் மிகைப்படுத்திச் சொன்னதற்காக மிகவும் வருந்துகிறேன். நிகழ்ச்சியில் தாங்கள் தொகுப்புரை ஆற்றும்பொழுது என்னை வள்ளுவருக்கு ஒப்பிட்டு, வாழும் வள்ளுவர் என்றோ அல்லது வள்ளுவரின் அவதாரம் என்றோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வள்ளுவரைக் காப்பாற்ற வேண்டுமேயானால், குறிப்பாக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் காப்பாற்ற வேண்டுமேயானால், வள்ளுவரை அல்லது வள்ளுவரோடு என்னை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
 
நான் வள்ளுவர் பால் அன்பு காட்டுவது, வள்ளுவத்தை தமிழகத்திலே மாத்திரமல்ல, தரணியெங்கும் பரப்ப வேண்டும் என்று கருதுவது இவையெல்லாம் வள்ளுவருக்காகத்தானே தவிர, எனக்காக அல்ல.

வள்ளுவர் என்னென்ன கருத்துக்களை சொன்னாரோ, அந்தக் கருத்துக்கள்படி நடப்பது நம்முடைய கடமை. அந்தக் கடமையை வள்ளுவர் வழியிலே செய்வதற்காகத் தான் தி.மு.கழக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தி மக்களுடைய ஆதரவைப் பெற்று வருகிறது. அப்படிப்பட்ட அந்த அரசின் சார்பிலே தான் வள்ளுவருக்கு விழா எடுப்பது   வள்ளுவருக்கு கோட்டம் அமைப்பது   வள்ளுவருக்கு சிலை எடுப்பது என்ற பல பெரிய காரியங்கள் தமிழகத்திலே தமிழ் வளர்ச்சிக்காக, தமிழர்களுடைய கலாச்சாரத்தை இன்று மாத்திரமல்ல, வருங்காலத்திலும் எதிர்காலத்திலும் படித்த இளைஞர்கள், வாலிபர்கள், மாணவர்கள், வழித்தோன்றல்கள் புரிந்துகொண்டு நம்முடைய இனம் என்ன, நம்முடைய மொழி என்ன, நம்முடைய கலை, கலாச்சாரம், நாகரிகம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இவைகள் எல்லாம் பயன்பட வேண்டும் என்பதற்காக அன்றைக்கு அமைக்கப்பட்ட சின்னங்களிலே ஒரு சிறந்த சின்னம்தான் இந்த வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டத்தை நான் முதலமைச்சராக இருந்தபோது அமைத்தேன்.

இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே தான் வைக்கப்பட்டது. காலை, மாலை, இரவு என்று இங்கேயே நான் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக் கொண்டு அதிலே படுத்துறங்கி, வள்ளுவர் கோட்டத்தின் திருப்பணிகள் நடை பெறுகின்ற காட்சியைக் கண்டு களித்தவன் நான். ஆனால் இந்தக் கோட்டம் திறக்கப்பட்ட அந்த நாளில் நான் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் விவரிக்க நான் விரும்பவில்லை. வள்ளுவர் கோட்டத்திலே அதைக் கட்டியவன் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கொதித்தார்கள். இங்கேயே நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்ச் சான்றோர்கள் தங்களுடைய சினத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி வள்ளுவர் கோட்டத்திலே வள்ளுவருடைய சிறப்பை செய்வோம், வள்ளுவர் பெயரால் நாம் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக் கூடாது, அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று எடுத்துக் கூறி பிறகு   நம்முடைய மூப்பனார் போன்றவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்ட பெரிய விழாவாக திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவினை குமரி முனையிலே நடத்தி, அந்த விழாவிலே பல அறிவிப்புகளைச் செய்து   அந்த அறிவிப்புகளின்படி வள்ளுவருக்கு சிறப்பு செய்கின்ற வகையில் இன்று வரையில் நடைபெற்று வருகின்றன.

பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்ற ஜெயந்தி நடராஜன், அவருடைய குடும்பத்தைப் பற்றி குறிப்பிட்டார். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றியும், அக்குடும்பத் தலைவர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகம் பற்றியும் கூறியிருக்கின்றேன். அன்று பெருந்தலைவர் காமராசர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகத்திற்கும், என்னுடைய குடும்பத்திலே இருந்து ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். அவரை நான் எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக எதிர்த்தேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதைப்போல அவரும் என்னை எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.

ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் என்னுடைய தாயார் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அவர், நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவர் என் வீட்டு முகப்பிலே எனக்காகக் காத்திருந்தார். துக்கம் விசாரிப்பதற்காக வந்து காத்திருந்தார். அந்த அளவிற்கு, என் தாயார் மீதிருந்த பாசத்தினால் என்று சொல்லுவதை விட, அரசியல் நாகரிகத்திலே, பண்பாட்டிலே அவ்வளவு அக்கறை வைத்திருந்தார் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

அப்படிப்பட்ட பெருந்தகையாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். இன்றைக்கு நாம் உயர்கல்விப் படிப்பு என்று அங்கெங்கெல்லாம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என நிரம்பத் தொடங்கிக் கொண்டிருந்தாலும்கூட, இவற்றிற்கெல்லாம் வித்திட்ட  மகான் பெருந்தலைவர் காமராஜர் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்டவர் பெயரால் மிகப்பொருத்தமாக ஜெயந்தி நடராஜன், எம்.பி.க்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது பெற்றவர்களையெல்லாம் நான் வாழ்த்துகின்றேன்.
 
பொதுவாக ஒவ்வொரு திருவள்ளுவர் நாளிலும், புதிய அறிவிப்புகள் சிலவற்றை அரசின் சார்பில் செய்வது உண்டு.  நூலாசிரியர்களுக்கு 72ஆம் ஆண்டு 2000 ரூபாயாக இருந்தது   1991ஆம் ஆண்டு அந்தத் தொகை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 98இல் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2008இல் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்படிப் படிப்படியாக உயர்த்திய இந்த அரசு   இனி, இன்று முதல் சிறந்த நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இருபதாயிரம் ரூபாய் என்பதை மேலும் பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி, முப்பதாயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மேலும் பத்தாயிரம் ரூபாய் என்பதை நாளைக்கே அவர்களுக்கு காசோலை மூலமாக வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நூல்களை வெளியிடுகின்ற பதிப்பகத்தாருக்கு 5000 ரூபாய் தான் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. பதிப்பகத்தாருக்கு இப்போது வழங்கப்பட்ட பரிசுத் தொகை 5000 ரூபாய் என்பதை 10000 ரூபாயாக இனி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்`` இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழ்நாடு