பொன்னர் சங்கர்!

திரைக்கதை, வசனத்தில் எத்தனையோ படங்கள் வெளிவந்திருந்தாலும் இத்தனை பிரமாண்டமாய் ஒரு திரைப்படம் வெளிவந்ததில்லை… எனும் அளவில் பராசக்திக்குப் பின் பேசப்படும் படமாக அமைந்துள்ளது cc இதை சில வாரங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த முதல்வர் கருணாநிதியே உணர்ந்ததால்தான் பொன்னர் – சங்கர் ஆடியோ வெளியீட்டு விழாவில், இப்படத்தை இயக்கிய தியாகராஜனின் கைகளில் முத்தமிட வேண்டும்! பொன்னரும், சங்கருமாக நடித்திருக்கும் அவரது மகன் பிரஷாந்தின் கன்னங்களில் முத்தமிட வேண்டும் என்று ‌தேர்தல் பரபரப்பிலும் வந்து அவ்விழாவில் கலந்து கொண்டு உணர்ச்சி பொங்க பேசியிருப்பார் போலும்!

கொங்கு மண்டலத்தின் அண்ணன்மார் கதை என்றும், ‌பொன்னர் – சங்கர் என்றும் இன்னமும் பேசப்பட்டு வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமைமிகு வரலாறுதான் இந்த படம்!

கதைப்படி, குறுநில அரசர்களான அப்பாவும், அண்ணனும் இவன் உனக்குத்தான்! அவனுக்குத்தான் நீ! என சிறு வயது முதல் அடையாளங் காட்டி வளர்த்த அம்மாஞ்சி மாமன் நெல்லையன் கொண்டானை தவிர்த்து திடீரென மாற்றான் மந்தியப்பனுக்கு மாலையிடும்படி இளவரசி அடிபணியாத தாமரையோ, மணந்தால் நெல்லையன் கொண்டான்! இல்லையேல் மரண(‌தேவன்)ங்கொண்டான் என தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கிறார். இளவரசர் மந்தியப்பன் கூட்டத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வேண்டா வெறுப்புடன் தாமரைக்கும், நெல்லையன் கொண்டானுக்கும் மணம் முடித்து வைத்து அரண்மனையை விட்டு துரத்தி அடிக்கின்றனர் கவுண்டர் மன்னர்களான அப்பாவும், அண்ணனும்! அப்பொழுது அம்மாஞ்சி கணவனுவன் சீரும் வேண்டாம்; சிறப்பும் வேண்டாம் என கிளம்பும் தாமரை, அண்ணன் சின்னமலை கொழுந்து கவுண்டரிடம் ஒரு சபதம் போடுகிறாள்! அது என்ன சபதம்? அது எப்படி நிறைவேதியது? அதை எப்படி பொன்னரும் – சங்கரும் நிறைவேற்றினார்கள்? அதை நிறைவேற்றும் பொன்னர் – சங்கருக்கும், தாமரைக்கும் என்ன உறவு? அவர்கள் ஏன் போகிறார்கள் துறவு? எப்படி உறவுக்கு திரும்புகிறார்கள் பிறகு? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பிரஷாந்தா(?)கவும் விடையளிக்கிறது ‌பொன்னர் – சங்கர் படத்தின் மீதிக்கதை!

பொன்னரும் – சங்கருமாகிய அண்ணன் – தம்பி பாத்திரங்களில் பொன்னராகவும், சங்கராகவும் சங்க கால தமிழனை, குறுநில மன்னனை, வீராதி வீரனை கண் முன் நிறுத்துகின்றார் பிரஷாந்த். காதல் இளவரசனாக மம்பட்டியானின் மகனாக மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருந்த பிரஷாந்த்தானா இது? வாவ்!! ஒவ்வொரு காட்சியிலும் புராண காலத்து போர்வீரனை, குறுநில இளவரசனை இல்லை… இல்லை… மன்னாதி மன்னனை நம் கண்முன் நிறுத்துகிறார் பிரஷாந்த். குதியேற்றமானாலும் சரி… வாள் சண்டையானாலும் சரி… வெளு்தது வாங்கிவிடுகிறார் மனிதர். பேஷ்! பேஷ்!!

பொன்னர் – சங்கர் இருவரது ஜோடியாக முத்தாயி, பவழாயி ‌கேரக்டரில் அறிமுகமாகியிருக்கும் பூஜா சோப்ராவையும், திவ்யா பரமேஸ்வரனையும் இயக்குனர் தியாகராஜனால் மட்டுமே தேர்ந்‌தெடுக்க முடியும் எனும் அளவில், படம் முழுக்க தேவதைகளாக மிளிர்கின்றனர் இருவரும்.

கதாநாயகர்களின் தந்தை நெல்லையன் கொண்டானாகவும், இளவரசி தாமரை (குஷ்பு)யின் அம்மாஞ்சி மாமனாகவும் நடிகர் ஜெயராம், நல்லதுக்கு போராடும் மாயவர் மந்திரி கிழவராக நாசர், பெருந்தன்மை மிக்க சோழ அரசனாக பிரபு, மான ரோஷம் நிரம்பிய காளி அரசனாக நெப்போலியன், வில்லன் மந்தியப்பனாக பிரகாஷ் ராஜ், அவரது அப்பாவாக கேப்டன் ராஜ், பொன்னர் – சங்கருக்காக தன் வாரிசுகளையும் காவு கொடுத்து மனைவியையும் இழந்து இருவருக்கும் போர் பயிற்சி தரும் ஆசானாக ராஜ்கிரண், சின்னமலை கொழுந்து கவுண்டராக பொன்வண்ணன், அவரது மகன் வையம்‌பெருமானாக ரியாஸ்கான், கதாநாயகர்களின் நண்பராக போஸ் வெங்கட், இளவரசி குஷ்புவின் மகளாகவும், கதாநாயகர்களின் சகோதரியாகவும் சினேகா மற்றும் கீதா, சீதா, லஷ்மி ராமகிருஷ்ணன், பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட எல்லோருமே பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. அவ்வளவு ஏன்? ஒரு பாடலு‌க்கு பிரமாண்ட முரசு கொட்டும் தாமிரபரணி பானு கூட பளீச் தேர்வுதான்.

எருதுகளை கட்ட ஏர் உழுத படியே பிரமாண்டமாக பொன்னரும் – சங்கரும் உறியடிக்கும் ஆரம்ப காட்சியில் தொடங்கி, இராமாயணம், மகாபாரத போர் காட்சிகளையே மிஞ்சும் வகையில் படமாகியிருக்கும் க்ளைமாக்ஸ் போர் காட்சி வரை ஒவ்வொரு சீனும் ரசிகர்களையே அரசர் காலத்திற்கு அழைத்துப் போகும் பிரமாண்டம் என்றால் மிகையல்ல! எல்லோரும் புராணகால தமிழையே பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது சிறு குறை!!

இந்த காலத்திற்கு பொருந்தும் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வசனங்களும், எந்த காலத்திற்கும் ‌பொருந்தும் அந்தப்புரத்து வசனங்களும், வார்த்தை ஜாலங்களும், தியேட்டரில் விசில் பறக்க செய்கிறது. டி.முத்து ராஜின் கலை – இயக்கம், ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு, பிரஷாந்தின் பிரமாதமான விஷுவல் எ‌பெக்ட்ஸ், தியாகராஜனின் இயக்கம், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவின் இதமான பதமான இசை என எல்லாமும் சேர்ந்து கலைஞரின் பொன்னர் சங்கரை காண்போரையும் (மனதளவில்) மன்னர் மன்னாதி மன்னர் ஆக்கிய ஆக்கியுள்ள‌தென்றால் மிகையல்ல.

Comments are closed.