பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

Category : சர்ச்சை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிங்கி பிராமணிக் மீடியாவின் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறார். அவர்மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்தும், அவரது பாலினம் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் சென்ற மாதம் முழுவதும் மீடியாவில் பலரும் விவாதித்தார்கள்.

பிங்கி ஏப்ரல் 10, 1986 அன்று பருலியாவில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய 17ம் வயது தொடங்கி 2007 வரை இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றெடுத்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக பிங்கியுடன் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு பெண் அளித்த புகாரின் பெயரில், போலீசார் பிங்கிமீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புகார் கொடுத்த பெண் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஒரு குழந்தைக்குத் தாயும்கூட.

இந்தப் பெண்ணுடன் பிங்கி மூன்றாண்டுகள் வாழ்ந்தது உண்மையானால் பாலியல் வன்புணர்வு பற்றிய புகார் எங்கிருந்து வருகிறது? புரிதல் இன்றியா மூன்றாண்டுகள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கமுடியும்? இத்தனை காலம் ஏன் இப்படியொரு புகாரை அந்தப் பெண் பதிவு செய்யவில்லை?

மார்க்சிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோதிர்மயின் கணவர் அவதார் சிங் என்பவரின் தூண்டுதலால் பிங்கியின் மீது தான் புகார் செய்ததாக அவரது கைதுக்குப் பிறகு சொன்னார் அந்தப் பெண். அவதார் சிங் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மேற்கு வங்க அரசு இலவசமாக பிங்கிக்கு அளித்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கே இந்தச் சதியை அவர் மேற்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். பிங்கி கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியான போது, அவருக்குத் துணையாக இருந்தவர் ஜோதிர்மயி.

விஷயத்தின் மையத்துக்கு வருவோம். பிங்கி எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்பது ஏன் இங்கு முக்கியமாகிறது? ஒருவர் தாம் விரும்பி ஏற்று தேர்வு செய்த பாலினத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு முழு சுதந்தரம் இருக்கிறது. அந்த வகையில், தனது sexual orientation எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை பிங்கிக்கு உண்டு.

பாலினம் என்பது ஒருவருடைய உளரீதியான, உணர்வு ரீதியான விஷயம். அதை அனைவரும் அறியும் பொருட்டு வெளிப்படுத்துவதும் சர்ச்சைக் குள்ளாக்குவதும் முதிர்ச்சியற்ற செயல்பாடு. மற்றவர்களைப் பாதிக்காதவரை, ஒருவருடைய தனி மனித வாழ்க்கையும் பாலினமும் தனிப்பட்ட விவகாரங்கள் மட்டுமே.

பிங்கி தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்கிறார். ஆனால், மருத்துவப் பரிசோதனை அவரை ஆண் என்கிறது. இரண்டில் எது உண்மை? மருத்துவப் பரிசோதனையை மட்டுமே வைத்து ஒருவரது பாலினத்தை உறுதி செய்யமுடியாது என்பதுதான் உண்மை.

ஆனால், பிங்கிக்கு இந்த உரிமை அளிக்கப்படவில்லை. அவரது பாலினத்தைத் தீர்மானிக்க நீதிமன்றம் மருத்துவப் பரிசோதனையையே தீர்வாக முன்வைத்தது. ஆனால் பாலினத்தைத் தீர்மானிக்கும் பரிசோதனை நம்பகத்தன்மையற்றது என்பதை அமெரிக்க உளவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயிரியல் ரீதியாக, இனப்பெருக்க உறுப்புக்கள் அடிப்படையில் பாலின அடையாளத்தை நிறுவிவிடமுடியாது.

உதாரணத்துக்கு, பிங்கியின் மருத்துவ அறிக்கை, அவருக்கு male pseudo hermaphroditism (ஆண் ஆனால், முழு ஆணல்ல) இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உயிரியல் ரீதியாக மட்டும் பாலினத்தை முடிவு செய்துவிடமுடியாது. நான் ஒரு திருனர் (ட்ரான்ஸ்ஜென்டர்) அல்ல, பெண்தான் என்று பிங்கி அடித்துக் கூறுகிறார். தான் ஒரு பெண் என்று உணரவும், செயல்படவும் பிங்கிக்கு முழு உரிமை இருக்கிறது. இந்நிலையில், மீண்டும் மீண்டும் அவரைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதையாகும்.

பிங்கி விஷயத்தில் பிரச்னை தொடங்கியது, மதுரையில் நடைபெற்ற ஒரு தேசிய விளையாட்டுப் போட்டியின் போதுதான். ஆண்களுக்கான ஹார்மோன்கள் அவரிடம் மிகையாக இருந்தது கண்டறியப்பட்டு, அவர் விளையாடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

விளையாட்டு வீராங்கனைகள்மீது இத்தகைய புகார்கள் எழுவது புதிதல்ல. இதே காரணங்களைக் காட்டி சாந்தி சௌந்தரராஜனிடம்இருந்து பதக்கம் பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆண், பெண் என்ற உடலியல், உளவியல் கட்டமைப்புகளைக் கடந்து, ஒருவருடைய திறமையை அங்கீகரிக்கும் அளவுக்கு நம் சமூகம் இன்னும் வளரவில்லை என்பதையே இத்தகைய சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இந்தியச் சட்டத்தின்படி பாலியல் வன்புணர்வு என்பது ஓர் ஆணால் பெண்மீது நிகழ்த்தப்படுவது. ஒரு பெண் இன்னொரு பெண்மீது பாலியல் வன்புணர்வு புகார் கொடுத்தால் அதை சட்டம் ஏற்காது. பிங்கியைப் பொறுத்தவரை, ஒரு வேளை அவர் பாலியல் வன்புணர்வு செய்தது உண்மையாகவே இருந்தாலும், அவர் ஓர் ஆண் என்று உறுதிசெய்யப்படாதவரை சட்டத்தால் அவரைத் தண்டிக்கவே முடியாது. இரு தரப்பினருக்கும் சரியான நீதி கிடைக்காமல் போய்விடக்கூடும்.

காவல் துறை பிங்கியைக் கையாண்ட விதமும் கண்டிக்கத்தக்கது. ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவரைக் குற்றவாளிபோல் நடத்தக்கூடாது. பிங்கியின் பாலினத்தைத் தீர்மானிக்கும் முன்பே காவல்துறை அவரை ஆண்கள் சிறையில் அடைத்தது. மேலும், மருத்துவப் பரிசோதனையில் நான்கு ஆண் மருத்துவர்களும் ஒரே ஒரு பெண் மருத்துவருமே இருந்துள்ளனர்.

இதற்கிடையில், பிங்கியின் பாலியல் பரிசோதனைப் படங்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியது. பிங்கியின் விருப்பத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனை வீடியோவாக வெளியில் கசிந்தது எப்படி? தேவையற்ற இந்தச் சர்ச்சை காரணமாக, பிங்கியின் ரயில்வே பணி பறிக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது?

இத்தனை வேதனைகளையும் தாங்கிக்கொண்டு, தன்னம்பிக்கை இழக்காமல் இருக்கும் பிங்கி சந்தேகமில்லாமல் ஒரு துணிச்சல்மிக்க பெண்.

(மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் ஆராய்ச்சி வட்டம், ஸ்ருஷ்டி. கட்டுரையாளர்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்). 

  << வறுமையின் நிறம் கருப்பு : நிலக்கரி சுரங்கங்களின் கதைகிட்டத்தட்ட அறிவியல் >> <br/>

இந்த இதழில் மேலும்..

  1. லண்டன் சந்தித்த சவால்கள்
  2. ஒரு பலாத்கார கேள்வி
  3. வளர்ச்சியின் நாயகன்
  4. மோடி பிரதமராக வேண்டும்!
  5. மோடி பிரதமராகக்கூடாது!
  6. பெண்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
  7. பள்ளிகளில் நவீன தீண்டாமை
  8. வறுமையின் நிறம் கருப்பு : நிலக்கரி சுரங்கங்களின் கதை
  9. பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி! (This post)
  10. ‘ஆரியம், திராவிடம் என்று பிரிப்பதே தவறு!’
  11. கிட்டத்தட்ட அறிவியல்
  12. பில்லா 2 திரை விமரிசனம்
  13. மனித உயிர்களோடு விளையாடும் செயலா?
  14. புத்தக அறிமுகம்
  15. விவசாயிகளுக்கு விடியல் உண்டா?
  16. சாஸ்திரி கொல்லப்பட்டாரா?
  17. திண்டாடும் அமெரிக்கா
  18. பிரணாப்பைப் பின் தொடரும் கையெழுத்து சர்ச்சை!
  19. அதிகரிக்கும் சிலை கடத்தல்கள்
  20. இப்படிச் சொன்னார்கள்
  21. ராகுல் காந்தி காகமா, குருவியா?
  22. தனியார் பள்ளிகளை மூட வேண்டும்
  23. அரசியல் கேளிக்கை
  24. நான் ஈ

Comments (3)

பின்கியை பற்றி இவளோ ஆழமா எந்த சேதியையும் தமிழில் படிக்கவில்லை …… இது எனக்கு பாலின அரசியல் குறித்து பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது … இதை எழுதிய கோபிக்கும், ஜ்ஹன்னுக்கு நன்றி.

[...] பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி ‘ஸ்ருஷ்டி’  என்னும் அமைப்பின் நிறுவனர் கோபி ஷங்கர். மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டம், ஸ்ருஷ்டி. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்னைகளை, சமூகப் பார்வையோடு அணுகி, விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.  Share/Bookmark கோபி ஷங்கர் 27 October 2012 விவாதம் ஆண், திருநர், பாலினம், பால் புதுமையர், பெண், மாற்றுப் பாலினம் ராஜா அபிமானி! [...]

Paavam pinki…. Indian Govt is fit for nothing…. Pinki vishayam Tamilil ivalo viriva veli varala.

Write a comment