சென்னை 600028 2 - காதல் கிரிக்கெட் - விமர்சனம்
8/5/2015 12:22:35 PM
நடிகர்கள்: ஜெய், சிவா, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், நிதின் சத்யா, விஜய் வசந்த், பிரேம்ஜி, விஜயலட்சுமி, சனா. இளவரசு,
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: பிளாக் டிக்கெட் கம்பெனி
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
இசை: யுவன் சங்கர் ராஜா
திருமணத்துக்காக வெளியூர் போகும் நண்பர்கள், ஆடும் செகண்ட் இன்னிங்ஸ்
ஆட்டத்தால் என்ன நடக்கிறது என்பதுதான் படம். முதல் பா
திருமணத்துக்காக வெளியூர் போகும் நண்பர்கள், ஆடும் செகண்ட் இன்னிங்ஸ்
ஆட்டத்தால் என்ன நடக்கிறது என்பதுதான் படம். முதல் பாகத்தில் கிரிக்கெட்
ஆடிய சென்னை ராக்கர்ஸ் அணியின் வீரர்கள் வேலை, கல்யாணம் என
செட்டிலாகிவிட்டார்கள் இப்போது. ஆனால், நட்பை மட்டும் அப்படியே
பேணுகிறார்கள். இதற்கிடையில் தன்னுடன் வேலைபார்க்கும் சனாவை காதலிக்கிறார்
ஜெய். வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார்கள். இதற்காக நண்பர்கள் டீம்,
தேனி செல்கிறது. போன இடத்தில் பழைய நண்பன் அரவிந்தை சந்திக்கிறார்கள்.
அவரது கிரிக்கெட் டீமை ஏமாற்றி ஏழு வருடமாக கோப்பையை கைப்பற்றும் வைபவ்
டீம் பற்றி அறிகிறார்கள். நண்பனுக்காக பழைய டீம், இப்போது களமிறங்குகிறது
மைதானத்துக்குள். விளைவு, வைபவின் சூழ்ச்சியால் ஜெய் திருமணம் டமாராகிறது.
பிறகு கிரிக்கெட் டீமை வென்றார்களா, ஜெய்க்கு திருமணம் நடந்ததா என்பதை
சிரிக்க வைத்து சொல்கிறார்கள்.
‘அவர்தான் இவர், இவர்தான் அவர்’ என
வெங்கட் பிரபுவின் வாய்ஸ் ஓவரில், அறிமுகமாகிறார்கள், அனைவரும்.
புன்னகையோடு தொடங்கும் இந்த அறிமுகக் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை,
அதே டெம்போவை அப்படியே கொண்டு சென்றிருக்கிறார் அமர்க்களமாக. கொஞ்சம்
தொய்வு வரும் போதெல்லாம் வசனங்களிலேயே சிக்சரும் ஃபோரும் அடித்து சிரிக்க
வைத்து விடுகிறார்கள், செமையாக. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் டென்ஷ னை,
அப்படியே இதிலும் கொண்டு வந்திருப்பதில் இருக்கிறது, வெங்கட் பிரபு மற்றும்
அவர் ‘பாய்ஸ்’களின் சீறும் கெத்து. சிவா அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலேயே
அதகளப்படுகிறது தியேட்டர். யுடியூப்பில் சினிமா விமர்சனம் செய்யும் அவர்,
‘அவதார்’ படத்தை எங்கயிருந்து சுட்டாங்க தெரியுமா?’ என கேமரூனை
கலாய்ப்பதில் இருந்து, ‘ஷார்க்ஸ் டீமுக்கு ஏன் ஷார்க்ஸ்னு பேர் வெச்சாங்க
தெரியுமா? எனக்கே தெரியாது, ஏன்னா அவ்வளவு பழசு’, ‘டேய், உனக்கு பாகுபலி 2
முக்கியமா, இல்ல சென்னை 28 பார்ட் டூ முக்கியமா?’ என்கிற ஒன் லைனர்களுக்கு
தியேட்டரில் பறக்கிறது கிளாப்ஸ்.
முதல் பாகத்தில் கிரிக்கெட் பேட்டை இழந்த விஜய் வசந்த், இதில் ஜெயித்து அதே பேட்டை வாங்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
காதலியை
கைப்பிடிக்கத் துடிக்கும் ஜெய், வெளிநாட்டு வேலைக்கு காத்திருக்கும்
நிதின் சத்யா, ஒன்றரை லட்சத்தை லபக்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடிய அரவிந்த்
ஆகாஷ், வாய் பேசமுடியாத மஹத், சரக்கடிக்காமல் கைகள் நடுங்கும் பிரேம்ஜி,
மீசையை திருக்கிக்கொண்டே வில்லத்தனம் செய்யும் வைபவ், ‘பையனையும் பொண்
ணையும் சேர்த்து வையுங்கப்பா’ என்கிற இளவரசு, விளையாட்டுத் துறை அமைச்சராக
வரும் பழைய கவுன்சிலர் சண்முகசுந்தரம், கிராமத்து அப்பாவாக, டென்ஷனாகும்
டி.சிவா, ஹீரோயினுக்கு உதவும் பாட்டி சச்சு, அடிக்கடி வேட்டியை
மடித்துக்கட்டி சவுண்ட் விடும் பஞ்சு சுப்பு என அனைவரும் அசத்தல் தேர்வு.
விஜயலட்சுமி,
அஞ்சனா, சாந்தினி மூவரும் எப்போதும் கணவர்களை திட்டித் தீர்ப்பதும்
கிளைமாக்ஸில் கிரிக்கெட் மைதானத்துக்குள், கோச் லெவலில் ஐடியா கொடுப்பதும்
ரசிக்க வைக்கிறது. ராஜேஷ் யாதவின் கேமரா, தேனியின் அழகையும் கிரிக்கெட்
ஆட்டத்தையும் வித்தியாசமான டோன்களில் படமாக்கி இருக்கிறது. யுவன் சங்கர்
ராஜாவின் பின்னணி இசை, கதையோடு பயணிக்க உதவியிருக்கிறது.
மகள் கேட்டார்
என்பதற்காக, காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்கும் பரந்த மனசுக்கார அப்பா, ஒரு
தவறுக்காக கல்யாணத்தை அப்படியே நிறுத்தி விடுவாரா என்ன?, கிரிக்கெட்டில்
ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு
போவார்களா, உள்ளூர்க்காரர்கள்? என ஆங்காங்கே கேள்வி கேட்க விஷயங்கள்
இருக்கிறது. இருந்தாலும் இந்த மட்டையாட்டப் படம், மட்டையாக்குகிறது மனசை.