விக்ரோறியா கல்லூரி

ல்லை நகர் ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திப்போன சமய மறுமலர்ச்சி, மிசனரிமாரின் பாடசாலைகளைவிடவும் சிறப்பான ஆங்கில பாடசாலைகளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஸ்தாபிக்கும் ஒரு இயக்கத்தை குடாநாட்டில் உருவாக்கி விட்டது. இவற்றில் முதன்மையானவர்களில் ஒருவர் கனகரத்தினம் முதலியார். இவர் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையினை 1876ம் ஆண்டினில் ஸ்தாபித்தார். பாடசாலையில் 1880 எனப்பொறிக்கப்பட்ட ஒரு மணி இன்னமும் இருக்கின்றது. இந்த சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலையே இன்று விக்ரோறியாக் கல்லூரியாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது.

1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையாக இது பதிவுசெய்யப் பெற்றது. இலங்கையில் முதலாவது அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையென்ற பெயரை இது பெற்றுத்தந்தது.

பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவந்ததது. ஒரு விளையாட்டு மைதானம் பாடசாலைக்கென பெறப்பட்டு, துடுப்பாட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு விக்ரோறியாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான முதலாவது துடுப்பாட்டப்போட்டி விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

பாடசாலை சஞ்சிகை தொடர்பான பத்திரிகை துணுக்கு.

பாடசாலை சஞ்சிகை ஒன்றை 1898 இல் வெளியிட்ட ஒரு முன்னணி பாடசாலையும் இதுவே. 1905 இல் இடம்பெற்ற கல்லூரி பரிசளிப்பு விழாவிற்கு அப்போது இலங்கையின் ஆளுனராயிருந்து சேர் ஹென்றி பிளக்கும் அவரது துணைவியாரும் பிரதம விருந்தினர்களாய் வந்திருந்து பெருமை சேர்த்தார்கள், அன்றே புதிதாய் அமைக்கப்பட்ட றிட்ஜ்வே மண்டபம் சேர் ஹென்றி பிளக்கினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் முதலாவது அதிபர்

கல்லூரியின் முதலாவது அதிபர்

ஐரிஸ் நாட்டவரான வில்லோக்பை சிமோல் பாடசாலையின் முதலாவது அதிபராவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர்களுடன் இணைந்து மூன்று பாடசாலைகளுக்கும் பொதுவான பரீட்சையினை கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். 1938இல் HSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராயிருந்த அமிர்தலிங்கம் என்பார் 1945 இல் முதன்முதல் கல்லூரியின் கலைப்பிரிவிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர்.

01.08.1946இல் 13 ஆசிரியர்களுடனும் 371 மாணவர்களுடனும் இயங்கிய பாடசாலையினை அரசாங்கம் கையேற்றுக் கொண்டது. 1948இல் கல்லூரியின் ஆரம்பப்பிரிவும் 1951இல் வகுப்பறைகளுக்கான புதிய கட்டடமும், நான்கு ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. 1955இல் கிரேக் (Gurugae) மண்டபம் அமைக்கப்பட்டு, பாடசாலை மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது. மைதானத்தின் ஒரு பக்கத்திற்கு சுற்றுமதிலும் அமைக்கப்பட்டது. 1962இல் பாலச்சந்திரன் எனும் மாணவர் பெரதெனிய பொறியில் பீடத்திற்கு தெரிவானார். இதே காலத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானின் சிலை பிரதான மண்டபத்தில் அமைக்கப்பட்டது.

1981 இல் இரண்டு மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், ஒருவர் பொறியியல் பீடத்திற்கும், ஒருவர் விஞ்ஞானபீடத்திற்குமாய் பல்கலைக்கழகம் தெரிவானார்கள். 1982 இல் பதினொரு மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவானார்கள்.